ஒரெட்டு வயது
அது,
ஓடி ஆடும் வயதும்
அது.
ஓயாமல் சுற்றும் காலம்
அது.
பெரியவர் வாயால்
திட்டும் கிடைக்கும்,
பெற்றோர் கையால்
குட்டும் கிடைக்கும்.
அதற்கெல்லாம் ,
அசைந்ததுமில்லை.
அவர் சொல் கேட்டு,
இசைந்ததுமில்லை.
படிக்காமல் விளையாடி
திரிந்ததும்,
விளையாட்டாய் படித்து
கிடந்ததும்,
காலம் கடந்து
இப்போதும்,
தேனாய் நெஞ்சில்
இனிக்கிறது.
ஈரெட்டு வயது
அது,
பொன்னான தருணங்கள்
பொங்கி வழிந்த
நேரமது.
பொல்லாத தருணமாகி
பொசுங்கி போன
கதையுமது.
பாடம் பிடிக்காது,
பாவம் பிடித்தது.
பாதியில் நிறுத்திய
படிப்பும்,
பாவை ஒருத்தியின்
நடிப்பும்,
எது சரி?
எது தவறு?
அறிய முடியா
தவிப்பை,
கண்மூடி நினைத்தாலும்,
கனலாய் நெஞ்சு
சுடுகிறது.
மூவெட்டு வயது
அது,
முச்சந்தியில்
நிறுத்திய
பருவமது.
நண்பரென்ற பெயரில்
நரிகள் வந்த
சாமம் அது.
கண்ணில் கொண்ட
கவர்ச்சி கண்டு
காதல் கொண்ட
காமம் அது.
காலால் மிதிபட்ட
பின்,
கண்ணீரில் மூழ்கிய
கடலுமது.
ஐயோ
வேண்டவே
வேண்டாம்,
அந்த நினைவுகள்.
அவை இன்னமும்
என்னுள் அழியா
தழும்புகள்.
நான்கெட்டு வயது
அது.
நான் கெட்டு திருந்திய
வயதும் அது.
நம்பிக்கை தந்த
விதையுமது.
தவமாய் கிடந்து
நல்ல மனைவி
வந்ததும்,
வரமாய் இரு
கனியை தந்ததும்,
சாதிக்க வேண்டுமென்ற
வெறி,
தறி கெட்டு
தாவுகிறது.
நல்லது,
கேட்டது,
மாறி மாறி
வருகிறது.
பாதியில் நிறுத்திய
படிப்பை,
அழகாய் சொல்லி
தருகிறது.
அதோ,
எதிர்காலம்
பிரகாசத்துடன்.......
வரவேற்கிறது.
உறுதியான எட்டு
வைத்து,
பாதம் அங்கே
செல்கிறது.

Thanks Rajini.
பதிலளிநீக்கு