செவ்வாய், 19 ஜூலை, 2011

சினிமாவில் காதல்

1930

ஏதோ ஒரு பூங்கா


காதலன்: கண்ணே....

காதலி: நாதா.....

காதலன்: அமுதூறும் உன் பேச்சும் ,தாலாட்டும் தென்றலும், குளிர்ந்த நிலவும் ,பட்சிகளின் கீதமும்,

நறுமணம் வீசும் மலர்களும் .............ஆஹா ....இப்பொழுது இப்படியே இருந்து விடலாகாதா?

(காதலி நாணத்துடன் சிரிக்கிறாள் ).

(இது டிசண்டா பிட்டு போடுறது ).


1940s

இப்போதும் பூங்காதான்.

காதலன்: அன்பே ........

காதலி: அத்தான் ........

(அப்புறம் ரொம்ப நேரம் பேசிக்க மாட்டாங்க, மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டே இருப்பாங்க).

காதலி: அத்தான் எவ்வளவு நேரம்தான் எதுவும் பேசாமல் பார்த்து கொண்டிருப்பாதாக உத்தேசம். காதலன் : மனதோடு மனம் பேசும்போது இதழ் பேச வேண்டுமா ?

காதலி : அப்படியா?

காதலன்: ஆகா, நாணத்தில் உன் கன்னம் ரோஜாவை விட சிவந்துவிட்டதே.....

காதலி: போதும், போதும், உங்கள் எண்ணம் எனக்கு தெரியாது என்று நினைத்து விட்டீரா ...... (பார்க் பெஞ்சை சுற்றி அவள் ஓடுவாள் , உடனே இவரும் பின்னாடியே ஓடுவாரு).

(இது ஒரு வகையான பிட்டு ).


1950s

தென்னம்தோட்டம் மரத்துக்கு ஒரு பக்கம் காதலன் இருப்பான், இன்னொரு பக்கம் காதலி இருப்பாள். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வருவாங்க. அப்புறம் ஓடி பொய் பக்கத்துல இருக்கிற ஆத்தங்கரை மணல்ல உக்காருவாங்க.

காதலன்: ஆனந்தி...

காதலி: சொல்லுங்கள் கண்ணன்....

( இருவரும் கை கோர்த்துகொள்வார்கள்).

காதலன்: இந்த சிவப்பு நிற புடவையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா.

(B&W காலத்துல அவங்க சொல்றத வெச்சுத்தான் நமக்கே என்ன கலர்னு தெரியும்). (உடனே காதலி திடீரென்று கண் கலங்குவாள்).

காதலன் : (அவள் முகத்தை தாங்கியவாறு) ஆனந்தி என்ன ஆயிற்று, ஏன் கண் கலங்குகிறாய்?

காதலி : கண்ணன் ... இந்த மகிழ்ச்சி இறுதிவரை நிலைக்கவேண்டுமென நினைத்தே கலங்குகிறேன். (இவரு உடனே அவளை ஆதரவா அணைப்பாரு).

காதலன் : அட அசடே அதற்காகவே அழுகிறாய், இதயத்தின் இறுதி ஓசை வரை, உன்னை என்னிடமிருந்து எவராலும் பிரிக்க இயலாது.

( காதலி காதலின் மார்பில் சாய்ந்து கொள்வாள்).

(இது செண்டிமெண்ட் பிட்டு ).


1960s


மெரீனா பீச்

காதலன்: நிர்மலா ..

காதலி: (பீச் மணலை நோண்டியப்படி) சொல்லுங்க சுந்தர்.

காதலன்: உன் சிநேகிதிங்க எல்லாம் என்னமோ சொன்னதாக சொன்னியே என்ன அது?

காதலி: அதுவா? அவர்களுக்கு என் மேல் பொறாமை.

காதலன்: பொறாமையா? உன் மேல் பொறாமை வருவதற்கு காரணம் என்ன?

காதலி: அதை சொன்னால்தான் உங்களுக்கு தெரியுமா?

காதலன்: சொன்னால்தானே தெரியும்.

(காதலனின் சட்டை மேல் பட்டனை நோண்டுவாள்).

காதலி: உங்களை போன்ற அழகான ஆண்பிள்ளை அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்றுதான்.

காதலன் : அப்படியா ?

காதலி : (அவன் கன்னத்தை தட்டியவாறு) அப்படிதான் .....

(சொல்லிவிட்டு எழுந்து ஓடுவாள், இவனும் பின்னாலயே ஒரு சைடாக துரத்தியவாறு ஓடுவான்). (இது ஒரு மொக்க பிட்டு).



1970s


அதே மெரீனா பீச்

காதலன்: டார்லிங்

காதலி : சொல்லுங்க டியர்

காதலன்: உட்லண்ட்ஸ்ல பாபி படம் போகலாமா?

காதலி: இன்னைக்கு வேண்டாம், அடுத்த வாரம் போகலாமே

காதலன்: ஏன் ?

காதலி : இன்னைக்கு டாடி நாடக சபாலே அவர் ப்ரெண்டோட மகள் நாட்டிய அரங்கேற்றத்துக்கு என்னை கூட்டிட்டு போறத சொல்லியிருக்கிறார்

. காதலன்: உங்கப்பா சரியான கண்ட்ரியா இருப்பார் போலிருக்கே?

காதலி : (சிணுங்கலுடன்) சுந்தர் டாடிய தப்பா பேசாதிங்க ப்ளீஸ்.

காதலன்: அப்பாவை பத்தி சொன்னா அவ்வளவு கோபம் வருதே. நாளைக்கே நம் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?

காதலி : வேறென்ன செய்வது அவர் கைகாட்டும் மாப்பிள்ளைகே கழுத்தை நீட்டவேண்டியதுதான்.

காதலன்: அப்பாடா ஒரு வாயாடிகிட்டயிருந்து தப்பிச்சேன்டாப்பா சாமி.

காதலி : என்ன சொன்னீங்க ....

(செல்லமாக காதலன் மார்பில் குத்துவாள், அவன் தடுப்பதை போல் பாவ்லா செய்து கட்டியணைத்து கொள்வான் . மூஞ்சிய மூஞ்சிய தேய்கிற மாதிரி பார்ப்பான் . உதட்டை கடிப்பான், பெருமூச்சு விடுவான் ).

காதலன் : டார்லிங்

காதலி : டியர்

(அப்புறமென்ன மறுபடியும் கொலவெறியோட கட்டிபிடிச்சிக்குவாங்க).

என்ன கன்றாவி பிட்டோ?


1980s


ஐயோ ஐயோ இந்த காலகட்டத்துல காதலை நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது. காலத்தால் அழியாத கல்வெட்டுல பொறிக்கவேண்டிய காலம் இதுதான். பெல் பாட்டம் பேண்ட்டு , நாய் நாக்கு மாதிரி ஷர்ட்டு காலரு , பரதேசி மாதிரி பரட்ட தல, எமதர்மன் பாச கயிறு மாதிரி பெல்டு, செம காமெடிப்பா . (காதலன் புல்லேட்ல காதலியே வச்சிகிட்டு ஓட்டிட்டு வரான். அவன் வாயிலே சிகரெட்டு. அப்படியே ஒட்டிகிட்டே சந்து, பொந்தெல்லாம் சுத்துறாங்க, அவ அடிக்கடி தன செயினை கடித்தவாறு சிரிச்சிகிட்டே வரா. வழியிலே பூக்காரி கிட்டே பூவாங்கி அவ தலையிலே வச்சு விடுறான், அப்பயும் அவன் வாயிலே சிகரட் இருக்கு . அப்படி இப்படின்னு VGP Golden பீச்சுக்கு வந்து சேந்துட்டாங்க. அங்க புல்வெளியிலே கொஞ்ச நேரம், Gold spot குடிச்சிட்டு கொஞ்ச நேரம் , பீச்சுல கொஞ்ச நேரம் ....முக்கியமான விஷயம் காதலன் வாயில எல்லா சீன்லயும் கண்டிப்பா சிகரட் இருக்கு ...... அப்படியே பீச் ரிசார்ட் பக்கம் வரும்போது மழை வந்துடும். அவன் பன்னிகாச்சல் வந்த மாதிரி நடுங்குவான் ...அவ பன்னியே கடிச்சமாதிரி நடுங்குவாள் ..அப்புறம் மெதுவா காட்டேஜ் உள்ளார போவாங்க .....

(அட போங்கப்பா, இது வரைக்கும் வந்த எந்த சீனுக்கும் வசனம் இருக்காது மியுசிக்தான் ....... Parararabbabaa .....Parararabbabaa.....Rabarabapabappaaa....Rabarabapabappaaa....Thurururutthuthu......Chujumchujumchum.......Chujumchujumchum............) காதுல ரத்தம் வந்தாலும் கடபாறைய எடுத்து சொறிவிக்கலாமுன்னு இருக்கும். )

இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் கடைசியிலே அந்த காதலன் கான்சர் வந்துதான் சாவான்.


இன்னமும் வரும்..............



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக