வியாழன், 29 செப்டம்பர், 2011

காதல் முடிவு

இவ்வளவு தாமதமாக,
வந்த நீ,
காயம் பட்ட 
ரணத்தை குணப்படுத்துவாய்.......
என்று நினைத்த
வேளையில்,
இன்னமும் ஆழமாக
கிளறிவிட்டு
சென்றுவிட்டாயே.
சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர் துளியிலும்......
கைக்கொட்டி சிரிக்கிறாயே!
ஆண்மகன் கண்ணீர்
விடலாமா?
கண்ணீருக்கு
ஆண்பால்,பெண்பால்
தெரியாது.....
அவள்மீதுக் கொண்ட
அன்பால்......
நொறுங்கிய இதயத்தின்,
சிதறல்களே.....
கண்ணீராய் தெறித்து
கொண்டிருக்கின்றன.....

அழகாய் வந்து
முழுதாய் என்னை
வாங்கிசென்ற நீ..........
நடுவழியில்,
போட்டு உடைத்தது
ஏனடி?
உன் தெருவெங்கும்
என் துகள்கள்.......
இன்னமும்,
உன் பாதம் பட.......
தரையில்,
துடித்துக் கிடக்கின்றன.
வேண்டாம்......
உன் பாதம்
பட வேண்டாம்.......
தாண்டியேனும் செல்....
உன் நிழலையேனும்
சுவாசித்து கொள்கிறேன்.

திரும்ப,
திரும்பக்,
கேட்கிறேன்.....
ஏன் சென்றாய்?
விரும்பித்தானே....
விரும்பினோம்.
இருவரும் 
முடிவு செய்துதானே.........
காதல் செய்தோம்......
காதல் முடிவு
மட்டும்.......
உன் தனிப்பட்ட
முடிவாக அமைந்தது
ஏன்?
அதை மட்டும்
முடிவாக,
சொல்லிவிட்டு செல்.

திங்கள், 26 செப்டம்பர், 2011

ஆளில்லா சாலையில் அவளுடன்......................


நீண்ட நாள் ஆசை
நிறைவேறியது.
ஆளில்லா சாலையில்,
நீயும் நானும்
மட்டும்.......
துளி துளியாய்
தூறல்,
முத்தமிட்டப் போதெல்லாம்......
உன் சிலிர்ப்பு,
இன்னும் என்னை
நெருங்கி.........
இல்லையில்லை,
நெருக்கி
நடக்கிறாய்.......
தூறல் மழையாகக்கூடாதா?
அதோ,
அந்த மேககூட்டம்.....
குடும்பம் குடும்பமாக,
ஊர்வலம் செல்கின்றன......
அதில்,
நான்,நீ,
நம் குழந்தைகள்..........
அடையாளம் காட்டுகிறாய்.
உன் கற்பனையை
நீயே பாராட்டவும்
செய்கிறாய்........

"உங்களைத்தான்
கல்யாணம் செய்துக் 
கொள்வேன் ."
அதை உங்கள்
தாய் மொழியில்
எப்படி சொல்வீர்கள்,
என கேட்கிறாய்.....
சொல்கிறேன்,
சொல்கிறாய்,
தப்புத் தப்பாக........
இருந்தாலும்,
என் மொழியை........
இவ்வளவு இனிமையாக......
என் தாய் 
பேசியும் கேட்டதில்லை....
பேசிய மகிழ்ச்சியில்,
உன் விரல்களை,
கழுத்து குழியில்
வைத்து,
கர்வ பாவனை
செய்கிறாய்.
அத்தனை சேட்டைகளையும்......
மனனம் செய்கிறேன் 
நான். 

"வானவில் வருமா"?
ஆர்வமுடன் கேட்கிறாய்....
"வராது" என்கிறேன்....
"ஏன்?"
ஏமாற்றமடைகிறாய்.
"தன்னை விட
அழகான வானவில்லை
காண அதற்கு
தயக்கம்."
உன் கண்ணை 
பார்த்து சொல்கிறேன்.....
உடனே புரியவில்லை
உனக்கு.......
புரிந்தவுடன்,
பூக்கிறது வெட்கம்........
இரு கைகளால்
உன் முகத்தை மூடி,
தலையை.....
அப்படி
இப்படி
நாட்டியமாட  செய்கிறாய்......
அந்த நொடியை காண
என் உடலெங்கும்.......
கோடி கண்கள் 
தோன்றாதா............

அசிங்கமாக 
தென்பட்டாலும்......
பரவாயில்லை,
ஏங்குகிறேன்.
நான்..........
மீண்டும் மீண்டும்
ஏங்குகிறேன்......

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஏரி அழகாகத் தெரிந்தது.........


காத்திருப்பதும்,
சுகம் என்பதை........
உன்னை காதலித்தப்பின்தான்
தெரிந்துக் கொண்டேன்....
எப்போது வருவாய்?
எப்படி வருவாய்??
யார் துணையுடன் வருவாய்?
என்ன பேசுவாய்?
நான்,
எவ்வாறு உளறுவேன்?
கற்பனை.....
காத்திருப்பு......
உனக்காகத்தான் என்று
நினைக்கும் போது,,,,,,,,,,,,,,,
உள்ளத்தில் 
புரியாத கர்வம்
தோன்றுகிறது........

விரல்களின் இடையில்,
எதற்கு இடைவெளி?
கேனத்தனமாக சிந்திப்பேன்.
உன் விரல்களின்
சந்திப்பு..........
இடைவெளியை 
நிரப்பியப் போது..........
உண்மைத் தெரிந்தது......
"ஐயோ.......இந்த ஏரி
எவ்வளவு அழகா
இருக்கு"
கரையோரம் நின்று
குதூகலப்படுகிறாய்.
உன்னைத் தவிர
வேறெதுவும் எனக்கு
அழகாய்த் தோன்றவில்லை...
உனக்காக,
நானும் குதூகலிக்கிறேன் (நடிக்கிறேன்)...


என்னில் ஒரு
வாட்டம்...........
கண்டுபிடித்த நீ........
காரணம் கேட்கிறாய்......
கேட்ட  நீயே
காரணமும் சொல்கிறாய்.
"மறந்துவிடுவேன்,
உங்களைப்
பிரிந்துவிடுவேன்னு...........
நினைக்கிறீங்களா?"
"அப்படியெல்லாம்
இல்லையே"
பொய் சொல்கிறேன்........
"என்னைப் பாருங்க"?
பார்க்கிறேன்,,,,,,,,,,,,,
அவள் கண்ணில்
ஒரு ஏக்கம்........
இமைகளில் ஒரு
துடிப்பு...........
இதழ்களில் ஒரு
புரட்சி.........
"உங்களை மறக்கனும்கிற
நெனப்பு........
எனக்கு தெரியாம
மனசுக்குள்ள வந்தாலும்.......
அடுத்த நிமிஷம்
நான் இருக்கமாட்டேன்?"
உணர்ச்சி வசப்படுகிறாய்........
உணர்வை கட்டுப்படுத்துகிறேன்.......
திரும்பி பார்க்கிறேன்.........
உண்மையிலேயே அந்த
ஏரி அழகாகத்தான்
தெரிகிறது........................
அவளை விட அல்ல.


சனி, 24 செப்டம்பர், 2011

"வலிக்கிறது"

உனக்கென்ன,
ஒரு வரியில்,
ஆரம்பித்ததை.......
ஒரே வார்த்தையில்,
முடித்து சென்றுவிட்டாய்....
உன்னை,
பொறுத்தவரை.......
வரியிலிருந்து வார்த்தை......
எனக்கோ,
வலி நிறைந்த வாழ்க்கை.
ஆம்,
வலிக்கிறது......
கொடுமையான வலி இது.
"வலிக்கிறது"
இதை படிப்பவர்களுக்கு,
இது ஒரு,
கடந்து செல்லும் சொல்
மட்டுமே........
அனுபவிப்பவனுக்குதான்.......
ஒவ்வொரு வினாடியும்
சித்திரவதையின் உச்சம்.

உன் நிழல்,
விழும் தூரத்தில்
என் மூச்சு காற்று,
வாழ்ந்ததும்,
என் நகம்,
தொடும் தூரத்தில்
உன் நிழல் 
தொடர்ந்ததும்........
பொசுங்கிப் போனதும்
ஏனடி?
என்னுள் எரியும்
மெழுகுவர்த்தி,
உன்னுடன் வாழ்ந்ததை....
வெளிச்சம் போடுகிறது.
எனது தேவை,
இருள் மட்டுமே..........
உன் நினைவுடன்,
உருகி கிடப்பதற்கு.

என்னை,
தவிர்த்ததற்கு.......
ஆயிரம் காரணங்கள்
உனக்கு கிடைக்கலாம்......
நான்,
தவிப்பதற்கு,
ஒரே ஒரு காரணம்
நீ மட்டுமே.
நீண்ட பயணம்......
சேர்ந்து தொடங்கினோம்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
தனிமையில் நான்.
வந்த பாதை.......
காரிருளில்,
முன் செல்லும் பாதை
முட்புதராய்.....
நான் மட்டும்
நிர்மூலமாய்.

என்றேனும்
ஓர் நாள்......
திரும்பவும் உன்னை,
சந்திக்க நேர்ந்தால்......
உன்னிடம் எதிர்பார்ப்பது...................
....................................................
.....................................................
உன் மன்னிப்பை
மட்டுமே.
என்னை வெறுக்கும்
அளவிற்கு......
நான் இருந்துவிட்டதற்கு,
என்னை மன்னித்தேனென்று......
ஒரு வார்த்தை.....
ஒரே வார்த்தை........
சொல்லிவிடு,
சென்றுவிடு....
போதும்......
நான் புனிதனாகிவிடுவேன்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

என் தேவதை நீ

என்னவாயிற்று......
நம்மை சுற்றி பரவியிருக்கும்,
புல்வெளிக்கு....
கண்ணீர் வடிகின்றனவே!
ஓ,
நிஜமான காதலர்களைக்
கண்ட,
ஆனந்தக் கண்ணீர் போலும்.
கண்ணே,
நீ வளர்ந்தது,
உன் பெற்றோர்காக....
மலர்ந்தது.......
எனக்காக மட்டுமே.
தொட்டுவிடும் தூரத்தில்தான்
அமர்ந்திருக்கின்றோம்.....
தொடவேண்டும் என்றும்
துடிக்கிறோம்...
ஆனாலும்,
கண்ணியம் காக்க
நடிக்கின்றோம்

இந்த நாளை
என்னால் மறக்கவே
முடியாது........
இன்று நான் அடைந்த
நிம்மதி,
இனி............
கிடைக்கவே கிடைக்காது......
எங்கிருந்தாய் நீ?
ஏன் என்னை
இத்தனை யுகம்
காக்க வைத்தாய்?
அத்தனை சுகத்தினையும்,
ஒரு பார்வையில்
என்னுள் நிறைத்தாயே....
என் நிறை தாயே.
வேறெப்படி,
சொல்ல முடியும்
உன்னை?
என்னை
உனக்கு எவ்வளவு
பிடிக்கும்,
என்பதை நான் அறிவேன்...
அதை,
நினைக்கும் போதெல்லாம்,
எனக்குள்ளே
நான் அழுவேன்....

என் தேவதை நீ?
என் தேவையும் நீ?
நீ மட்டுமே.....
உன் உச்சந்தலையை
முகர்ந்து.......
என் உள்ளங்கையில்
ஏந்தி,,,,,,,
உலகின் கடைசி
நாள் வரை.........
என் காதல்,
ஒரு சதவிகிதம்
கூட குறையாமல்.......
உன்னை தாங்கும்
நாட்களை,
நீ,
காண நேர்ந்தால்.......
சொர்க்கம் 
அதுவென்று இனிதே....
நான்,
கண்மூடுவேன்.

புதன், 21 செப்டம்பர், 2011

வெட்கங்களும், வெட்கப்பட்ட தருணம் அது.


ஒவ்வொரு முறை
உன்னை,
பார்க்கும் போதெல்லாம்.....
புதிதாக பார்ப்பதை
போலவே,
பார்க்கிறேன்.....
ஒவ்வொரு முறை
நீ,
சிரிக்கும் போதெல்லாம்......
புதிதாக பிறந்ததாகவே,
உணர்கிறேன்.
மெல்ல என்
தலைமுடியை,
கோதிவிடுகிறாய்.......
உன் நகத்தினால்,
என் நகங்களை.......
சுத்தம் செய்கிறாய்.
என் சட்டை,
நூலொன்று மேல்
எழுந்து நிற்கிறது,
உன் பற்களால்
கடித்து துப்புகிறாய்......
நான் படும்
அவஸ்தையை,
நான் அறியாமல்
ரசிக்கிறாய்.........
மேலும் மேலும்
உன் செய்கையால்,
என்னை....
ருசிக்கிறாய்.......

அதென்ன?
உன் பார்வைக்கு
அப்படி ஒரு,
சக்தி..........
எரிந்துக்கொண்டே......
குளிருகிறேனே!
அடிக்கடி,
கழுத்திலிருக்கும்
உன் துப்பட்டாவை,
சரி செய்கிறாய்.......
நொடிக்கு நொடி,
என் பார்வையை......
தடுமாற வைக்கிறாய்......
என் பெருமூச்சு,
உன்னை தீண்டும்போது........
கண்ணை மூடி,
பொய்யாக வெட்கப்படுகிறாய்......
அந்த வெட்கசிரிப்பை,
காண.......
சத்தியமாக இந்த 
ஜென்மம் போதாது.......

"கைரேகை பார்க்கதெரியுமா"
திடீரென கேட்கிறாய்...
"தெரியும்"
பொய் சொல்கிறேன்.....
பொய்யென உனக்கும் 
தெரியும்.....
கையை நீட்டுகிறாய்.
மெதுவாக ,
உன் பெருவிரலை.....
மட்டும் தாங்குகிறேன்,
மற்ற விரல்கள்,
என்னை சபிக்கின்றன.
ஏதேதோ உளறுகிறேன்.....
தவமிருந்து கேட்கிறாய்.....
"எத்தனை குழந்தைகள்?"
சிரிக்காமல் கேட்கிறாய்.
"பெண் ரெண்டு,
 ஆண் ஒன்று".
சிரித்தவாறு சொன்னேன்.
"ஏன் ஆண் மட்டும்
 ஒன்று?"
விளக்கம் கேட்கிறாய்.
"அதான் இன்னொன்றாய்
 நான் இருக்கிறேனே".
இதற்காகவே,
காத்திருந்தவள் போல்.......
என்னை,
வாரி அனைத்து........
..............................................
...............................................
.............................................
..............................................
..................................................
வெட்கங்களும்,
வெட்கப்பட்ட தருணம் அது.

திங்கள், 12 செப்டம்பர், 2011

கணக்கில் வராத காவியம்


இன்னமும் மறக்கவில்லை,
நீ,
விட்டு சென்ற நாளை,
வெட்டி சென்ற நாளை,
ஏன் வெறுத்தாய்
என்னை....
சிந்தித்து சிந்தித்து
சிலையானேன்....
என்னையே,
நிந்தித்து நிந்தித்து
ஜடமானேன்.....
ஆறவில்லை நீ
சுட்ட வடுக்கள்.
காயவில்லை 
கண்ணீர் மடுக்கள்....
சிறகு விரித்த
சமயம்.......
சிலுவையை சமர்ப்பித்தாயே.
சருகென கிடந்தாலும்,
உன் கால்தடத்திற்கு.....
தவம் கிடந்தேனே,
நீ வருவாயென.......
நீ வரவேண்டும்...
உன் வரம் வேண்டாம்...
சாபமேனும் கொடு.

உன்னை
என்னைத்தவிர,
வேறு எவரால்
புரிந்து கொள்ளமுடியும்?
என்னை
நீ புரிந்துக்கொள்ளவில்லை
என்றால்?
வேறு யார்
புரிந்துக்கொண்டுதான்
எனக்கென்ன பயன்.
என்னையே கிழித்துகொள்கிறேன்,
அழித்து கொள்கிறேன்,
ரத்தம் வருகிறது,
வரட்டும்.......
வலிக்கிறது.......
நீ விட்டு சென்றதை
விட அல்ல....
நீ உணரமாட்டாய்.....
உணர தேவையில்லை,
சாதிக்க பிறந்தவள்
நீயா?
தெரியாது.......
சாகடிக்கப் பிறந்தவள்
என்பதை,
நான் உணர்கிறேன்...

ஒன்று சேர்ந்த
காதல்கள்......
வெறும் கதைகள்.....
சேரா காதல்களே
காவியங்கள்....
நம் காதலையும்
காவியமாக்கியதற்கு
மிக்க நன்றி.
"உங்கள் வார்த்தையில்,
வைரமுத்து,வாலி
சாயல் தெரிகிறதே".
சிலர் விமர்சிக்கிறார்கள்.....
அதனாலென்ன,
உன்னுடைய  தழுவல்தான்
பொய்யாகிப்போனது,
என்னுடைய தழுவல்
நிஜத்தை சொல்லட்டுமே.



சனி, 10 செப்டம்பர், 2011

ஞாபகம் இருக்கிறதா?


ஞாபகம் இருக்கிறதா?
எவ்வித
எதிர்ப்பார்ப்புமின்றி,
எதிர் எதிராக
நீண்ட நேரம்
மௌனமாய் அமர்திருந்தோமே,
நான்கு விழிகளில்
உயிர் பரிமாற்றம்,
நிசப்தமாக
நடந்தேறியதே.........

தானாய் வழிந்த
கண்ணீரை........
தாயாய் மாறி
துடைத்தாயே..........
சேயாய் நீயும்
துடித்தாயே.


ஒருநாள் உன் கனவில்,
வரவில்லை என்றாலும்
மறுநாள்,
என்னை 
கோபித்துகொள்வாயே.
உன் ஜன்னல்
வழியே,
ஓராயிரம் சைகை
பேசி.........
நூறாயிரம் ஆண்டு
காதல் வாழ்ந்தோமே.
நீ
என்னை கடக்கும்
வினாடியில்,
கண்ணிமைக்க நேர்ந்தால்
என்னையே,
சபித்துகொள்வேனே.
என் தேசம்
மட்டும்,
மேற்கு திசையில்
உதயமாகிறது
என்று சொல்வேனே.......
ஞாபகம் இருக்கிறதா?


"காதலனை கண்ணீர்
கடலில்,
மூழ்கடித்துவிட்டு  செல்ல
எப்படி சில
பெண்களால் முடிகிறது?"
அடிக்கடி புலம்புவாயே.
"உனைப் பிரிந்து
வாழ நேர்ந்தால்,
உயிர் பிரிந்து
போவேனே...."
கதை புனைந்தாயே.
"கடைசி மூச்சு
காற்றில் கலந்தாலும்,
உன் பேரை சொல்லி,
திரிந்து கிடக்கும்."
வசனம் பேசினாயே,
ஞாபகம் இருக்கிறதா?

அந்த மலைப்பாதை
ஆளற்ற நடைபாதை,
மௌனம் கிழித்த
நீரோடை......
நம் காதலுக்கு
குடைப் பிடித்த
மழை.........
மெல்ல தீண்டிய
மேகம்......
தீயாய் எரிந்த
தேகம்......
மெல்ல தோள் சாய்ந்து
மெதுவான நடை.
"நீ வேண்டும்"
"நீ வேண்டும்"
திரும்ப திரும்ப
சொன்னாய் நீ.
அந்த கணமே
ஆயுள் முடியாதா
ஏங்கினேன் நான்.
ஞாபகம் இருக்கிறதா?
உனக்கு
ஞாபகம் இருக்கிறதா?